ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வர தடை-பள்ளி கல்வி துறையின் உத்தரவால் வருகைப் பதிவில் புதிய சிக்கல்..!

சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், ‘எமிஸ்’ தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், பள்ளிக்கு மொபைல் போன் கட்டாயம் எடுத்து வருமாறு, ஏற்கனவே பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. அதாவது, எமிஸ் என்ற பள்ளிக் கல்வி துறையின் மொபைல் போன் செயலியில், மாணவர்களின் தினசரி வருகைப்பதிவை, தினமும் வகுப்பறையில் இருந்தபடி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.அதே போல், ஆசிரியர்களின் வருகையையும், தலைமை ஆசிரியர்கள் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு, வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போனை பயன்படுத்தியாக வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பது, முரண்பாடாக உள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.