கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்

  • கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்

கோவை அருகே கேரள பெண்ணிடம் டீ மாஸ்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்.

கோவை அருகே உள்ள சூலூரில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க உறவினரான 45 வயதான பெண் தனது மகள் மற்றும் மகளின் தோழிகளுடன் சூலூர் சென்றார். பின்னர் அவர்கள் அந்த நபரை பார்த்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது அந்த பெண் மற்றும் ஒரு இடத்தில் தனியாக நின்றார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். அதை கேட்டதும் அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை சவுரிபாளையத்தில் டீ மாஸ்டராக பணியாற்றி வரும் 24 வயதான வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதை அறிந்த அந்த பெண் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று அந்த வாலிபருக்கு அறிவுரை கூறினார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதுடன். நான் தவறு செய்து விட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என்றும் தனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. என்பதால் நன்னை கைது செய்தால்
வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவார்கள் என்று அந்த பெண்ணிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனால் மனம் இறங்கிய அந்த பெண். அந்த வாலிபருக்கு தகுந்த அறிவுரை கூறியதுடன், போலீசாரிடம் அந்த வாலிபரை கைது செய்ய வேண்டாம் என்றும், அவருக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைக்குமாறும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபருக்கு தகுந்த அறிவுரை கூறி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அந்த பெண் கூறும்போது, ஏதோ திடீரென்று இதுபோன்று செய்து விட்டதாக அந்த வாலிபர் என்னிடம் கண்ணீர் மல்க கூறினார். அவருடைய குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவரை மன்னித்து, இது போன்று யானையும் செய்ய கூடாது என்று அறிவுரை கூறி விட்டு விட்டேன் என்றார்