தாளவாடி மலைப்பகுதியில் ஒரே இரவில் டாஸ்மாக் கடை மற்றும் இரண்டு கோவில்களில் கொள்ளை- அச்சத்தில் மலைகிராம மக்கள்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மலை கிராமங்களில் இரண்டு கோவில்களில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் சூப்பர்வைசராக பாலமுருகன், விற்பனையாளராக சக்கரபாணி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று காலை டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கிடைத்த தகவலின் பெயரில் இருவரும் சென்று பார்த்த போது கடைக்குள் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே தாளவாடி அருகே  ஒங்கன்புரம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் பணம் ரூ.10,000 இருந்த நிலையில் இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதேபோல் பீம்ராஜ் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலின் முன் பக்க கதவு பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் அந்த கோவிலில் எதுவும் திருடு போகவில்லை.
இதற்கிடையே  ஈரோட்டில் இருந்து மோப்பநாய்  மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற டாஸ்மாக் மதுபான கடை மற்றும் ஒங்கன்புரம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் பகுதிகளில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் கோவில் மற்றும் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே இரவில் இரண்டு கோவில்கள் மற்றும் ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தாளவாடி  மலை கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.