புதுடெல்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துக் கொண்டவர்களில், 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ஆவர். இதில் மாணவிகள் மட்டும் (5,693 பேர்) மற்றும் தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள்(4,246 பேர்) ஆகியோர் அடங்குவர். அதிலும், தமிழ்நாட்டில் இல்லத்தரசிகள் (3,221 பேர்) தற்கொலை செய்து கொண்டனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம்(3,055 பேர்) மற்றும் மராட்டியம்(2,861 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் தமிழ்நாட்டில் 13.9 சதவீதம் பதிவாகியுள்ளது, 13.2 சதவீதம் மத்தியப் பிரதேசம் மற்றும் 12.3 சதவீதம் மராட்டியத்தில் பதிவாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் (1,64,033 பேரில் 1,09,749 பேர்) திருமணமானவர்கள் என்பதும் 24.0 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள் (39,421 பேர்) ஆவர். 2021 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலை செய்துகொண்டவர்களில் விதவை 1.5 சதவீதம் (2,485 பேர்), விவாகரத்து பெற்றவர்கள் 0.5 சதவீதம் (788 பேர்) மற்றும் பிரிந்து தனியே வாழ்ந்தவர்கள் 0.5 சதவீதம் (871 பேர்) ஆவர்.
அதிகமாக, பெண்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் – திருமணம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள்) மற்றும் கருவுறுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில், 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள்( 34.5 சதவீதம் பேர்) மற்றும் 30 – 45 வயதுக்குட்பட்டவர்கள்(31.7 சதவீதம் பேர்) ஆவர்.