மார்ச் 18-ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்..?

சென்னை: நடப்பாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜன. 5-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, பேரவை தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப். 8-ம்தேதி சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக வரும் 18-ம் தேதி சட்டப்பேரவை கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், கடந்த ஆண்டைப்போல மறுநாள் (மார்ச் 19) வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, தமிழக அமைச்சரவை கூடி, அதில்இடம்பெற வேண்டிய முக்கியஅம்சங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கும்.

இந்த நடைமுறைக்கான அமைச்சரவைக் கூட்டம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய ஒரு வாரத்துக்குள் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னதாக மார்ச் 8-10 அல்லது 9-11 ஆகிய 3 நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்று வரும் பணிகள், புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டியவை, சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, இறுதியாக முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.