குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

குடியரசு துணைத் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயச்சந்திரன், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். டெல்லி சென்ற முதலமைச்சரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றதற்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

மாலை 4:30 மணிக்குப் பிரதமர் பிரதமர் மோடியைச் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.