சென்னை: இலங்கை மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து இன்று வரைவோலையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பினார்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தில் பேசிய அப்போதையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், “இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. தமிழர்கள் மனித நேயத்தில் உலகத்திலேயே உயர்ந்தவர்கள் என்பதன் அடையாளமாக இந்தத் தீர்மானம் உள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதியுடன் சேர்த்து நான் சார்ந்துள்ள குடும்பம் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிதிக்கான வரைவோலையை தமிழக நிதித் துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு ஓபிஎஸ் அனுப்பியுள்ளார். இதன்படி ஓ.ரவீந்திரநாத் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் மற்றும் ஓ.ஜெயபிரதீப் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் என்று மொத்தம் ரூ.50 லட்சத்திற்கான வரைவோலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.