சென்னை: அந்தமான் மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை மத்திய அரசு விரைவில் செய்து கொடுக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல் நாளான நேற்று ரங்கத் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது, ஒன்றிய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களால் அடைந்த பலன்கள் குறித்து மீனவர்கள் எடுத்துரைத்தனர். மேலும், ‘நாங்கள் பைபர் படகில் 5 கடல் மைல் தொலைவு வரை மட்டுமே சென்று மீன் பிடித்து வருகிறோம். எனவே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தேவையான வலை மற்றும் ட்ராவலர் எனப்படும் அதிநவீன படகு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,’ என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களிடம் பேசிய எல்.முருகன், ‘உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர் மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நவீன மீனவர் கிராமத் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான ட்ராவலர் படகு உள்ளிட்ட வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் நீண்ட தூரம் சென்றால் மட்டுமே அதிகமான, அரியவகை மீன்கள் கிடைக்கும். ஆனால், அருகில் உள்ள பிற நாட்டு மீனவர்கள் இந்த மீன்களை எல்லாம் பிடித்துச் செல்கின்றனர். இதனால் நமக்கு எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதை அறிவேன். எனவே, இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்,’ என தெரிவித்தார்.
Leave a Reply