மார்ச் 18-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்..!

சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்று, பேரவையில் அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

அத்துடன் 2022-23 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22 ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கையை ஆகியவையும் பேரவையில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். துறைரீதியான மானிய கோரிக்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் அதன்படி தொடர்ந்து நடத்தப்படும்.

பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பப்படும். அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது, தொழில்நுட்ப பிரச்சினைகளை களைந்த பின் நடைமுறைப்படுத்தப்படும். நீட் தொடர்பாக பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட் டுள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரித்து தகவல் அளிக்கப்படும். கரோனா கட்டுக்குள் இருப்பதால், பேரவைக்குள் வரும்போது ஏற்கெனவே இருந்த நடைமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள், துறைகளுக்கு நிதி ஒதுக்குவது, மின் கட்டணத்தை மாதம்தோறும் கணக்கிடுவது உள்ளிட்ட அறிவிப்புகள் இந்த கூட்டத் தொடரில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.