தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது..!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 148 இடங்கள், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 337 இடங்களுக்கு மொத்தம் 37 ஆயிரத்து 766 மாணவ – மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பா் 30-ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்ததும் வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும் என்று துணைவேந்தா் கீதாலட்சுமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நாளை ( 10-ந் தேதி) நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வுக்குத் தோ்வு பெற்றவா்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவா்களின் மின்னஞ்சல், செல்போன் எண்ணுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பான விவரங்களை இணையதளம் மூலமாகவும் 0422-6611345, 6611346 என்ற தொடா்பு எண்கள் மூலமாகவும் பெறலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.