பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 35 பேர் பலி – 200 பேர் காயம்..

பெஷாவர்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தின், பஜாவுர் மாவட்டத்தில், கர்தெஹ்சில் பகுதியில், ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் என்ற அமைப்பு சார்பில், ஜூலை.,30ம் தேதி, மாநாடு நடந்தது.500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, இந்த மாநாட்டில் நடந்த, குண்டுவெடிப்பு தாக்குதலில், ஜாமியத் உலமா இஸ்லாம் பாஸில் அமைப்பின் தலைவர், மெளலானா ஜியாவுல்லா ஜான் உட்பட, 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் : 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இது குறித்து, கைபர் பக்துன்வாவின், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரோஸ் ஷா ஜமால் கூறியுள்ளதாவது:காயமடைந்தவர்கள் பஜாவுர் மற்றும் அதற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சகைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் வாயிலாக, ஆபத்தான நிலையில் உள்ளவர்கள், பெஷாவர் மற்றும் அதன் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.குண்டுவெடிப்பு நடந்த இடம், சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே, தற்போது, எங்களின் முதன்மையான பணி. மீட்பு பணிகளில், ராணுவம் மற்றும் இதர அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பஜாவுர் மாவட்ட, சுகாதார அதிகாரி பைசல் கமல் கூறுகையில்,’ 150 பேர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள், பெஷாவரில் உள்ள லேடிரீடிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில், உள்ளூர் நிருபர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்,’ என்றனர்.இது குறித்து கைபர் பக்துன்வா ஐ.ஜி., அக்தர் ஹயாத்கான் கூறுகையில், நடந்துள்ள தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்துவருகிறது என்றார்.இத்தாக்குதலுக்கு, பாக்., பிரதமர் ஷெபால் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..