மாஜி அமைச்சர் மூர்த்தி வீட்டில் திடீர் ரெய்டு!

கல்குவாரிகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தியின் இல்லத்தில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் மூர்த்திக்குத் தொடர்புடைய இடங்கள் மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். குவாரி உரிமங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவதை அறிந்த மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரது இல்லத்தின் முன்பு பெருமளவில் திரண்டு வருகின்றனர்.

தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரின் வீட்டைச் சுற்றி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து விசாரணை அமைப்புகள் மற்றும் காவல்துறையினரின் சோதனைகள் நடைபெற்று வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.