பள்ளி திறப்புக்கு பின் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 20ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், 27ஆம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. இருப்பினும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

கடந்த ஜனவரியில் தாக்கிய கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், நாட்டில் தற்போது, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடையே கொரோனா பரவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா,கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வரக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது நான்காம் அலைக்கு வழி வகுத்து விடுமோ? என்ற அச்சம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை , செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன், இப்போதைய பரவலால் வீணாகி விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனைகளை தீவிரப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிகுறிகள் முறையாகக் கண்காணிக்கப்படுவதுடன் சளி மாதிரிகளை பகுப்பாய்வு மரபணு பகுப்பாய்வு செய்வது முக்கியம் என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் பத்து நாட்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றார்.

பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது. விரைவில் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.