பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல்துறைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை அருகே நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் கீழே தள்ளி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த தனியார் செய்தி தொலைக்காட்சியை சேர்ந்த இரண்டு செய்தியாளர்கள் இந்த தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதனைப் பார்த்து அந்த கஞ்சா இளைஞர்கள் எங்களையே படம் எடுக்கிறீர்களாடா என தகாத வார்த்தைகள் கூறி செய்தியாளர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் செய்தியாளர் நாடிமுத்து மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் மீது காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் (CUJ) வேண்டுகோள் விடுகிறது.

சமீப காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களும், அவதூறு பேச்சுகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது..