சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரை கண்காணிக்க தனி குழு அமைப்பு – கடும் நடவடிக்கை.!!

கோவை : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வதந்தி பரப்பவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடைய வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்  வகையிலும், பீதியை தூண்டும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கோவை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம் அருகே மீடியா கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது . இங்கு முகநூல் உட்பட அனைத்து சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்படும். இதில் யாராவது வதந்தியை பரப்புவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . இது தவிர கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சமூகவலை செயல்பாடுகளை கண்டறிய தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சமூக வலைதளங்களை கண்காணிப்பார்கள். இதில் மோதலை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மற்றும் சமூக அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிப்பவர்கள், வதந்தி பரப்பி பொதுமக்களிடையே பீதி ஏற்படுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் கோவை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த கேமராக்களை ஒரே கோணத்தில் மட்டுமே கண்காணிக்க முடியும். ஆனால் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்திலும் கண்காணிக்க முடியும்..