குஜராத் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமோகம் – இபி பில்லுக்குப் பதில் வருமானம்- பிரதமர் மோடி பெருமிதம்..!

டெல்லி: குஜராத் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமோகமாக உள்ளது; மாத கடைசியில் இபி பில்லுக்குப் பதில் வருமானம் கிடைக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கிராமங்கள், தங்கள் இல்லங்கள், தங்களுடைய குடும்பத்தாரிடம் வந்திருக்கின்றார்கள். சட் அன்னை அனைவரின் வளம், அனைவரின் நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாகும்.

சூரிய தேவன் அளிக்கும் வரம் தான் சூரியசக்தி. இந்த சூரிய சக்தி என்பது எப்படிப்பட்ட விஷயம் என்றால், ஒட்டுமொத்த உலகும் தனது எதிர்காலமாக இதைப் பார்க்கிறது, நம் பாரத நாட்டைப் பொறுத்த மட்டிலே, சூரியதேவன் வழிபடு தெய்வம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையின் மையமாகவும் இருந்து வந்திருக்கிறார். பாரதம் இன்று தனது பாரம்பரியமான அனுபவங்களை நவீன விஞ்ஞானத்தோடு இணைத்து வருகின்ற வேளையில், இன்று நாம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறோம். சூரியசக்தியால் நமது தேசத்தின் ஏழைகள் மற்றும் மத்தியத்தட்டின் வாழ்க்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பதும் ஆய்வுக்குரிய விஷயம்.

மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரியசக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். மோடேரா சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது.

இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள். அதாவது, பாரதத்திலே சூரியசக்தி கிராமங்களின் நிறுவல் என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை, இதனை மோடேரா கிராமவாசிகள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். சூரியசக்தி, இப்போது பணத்தையும் மிச்சப்படுத்தும், வருவாயையும் பெருக்கும்.

ஜம்மு-கஷ்மீரத்தின் ஸ்ரீநகரிலே ஒரு நண்பர், மன்சூர் அஹமத் லஹர்வால். கஷ்மீரத்தின் குளிர் காரணமாக மின்சாரம் கணிசமாகச் செலவாகிறது. இதனால் மன்சூர் அவர்களின் மின்சாரப் பயன்பாட்டிற்காக 4000 ரூபாய்க்கும் அதிகமாக ரசீது வந்து கொண்டிருந்தது; ஆனால் மன்சூர் அவர்கள் தனது வீட்டின் கூரையிலே சூரியசக்திக் கருவியைப் பொருத்தியபிறகு, அவருடைய செலவினம் பாதியையும் விடக் குறைந்து விட்டது. இதே போல, ஒடிஷாவின் ஒரு பெண், குன்னீ தேவுரீயும் சூரியசக்தி மூலம் தனது சகப் பெண்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். குன்னீ, ஒடிஷாவின் கேந்துஜர் மாவட்டத்தின் கர்தாபால் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினப் பெண்களுக்கு, சூரியசக்தியால் இயங்கும் ரீலிங் கருவியின் துணைக்கொண்டு பட்டு நெசவுப் பயிற்சி அளித்து வருகிறார். சூரியசக்திக் கருவி காரணமாக இந்தப் பழங்குடியினப் பெண்களுக்கு மின்கட்டணச் செலவின் சுமை இருப்பதில்லை, அவர்களுக்கு வருமானமும் உண்டாகிறது. இது தான் சூரியதேவனின் சூரியசக்தியின் வரப்பிரசாதமாகும். வரமும், பிரசாதமும் எத்தனை பரவலானவையாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை நல்லதாகவும் இருக்கும். ஆகையால், நீங்களும் இதிலே இணைந்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள் என்பதே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.