கோவையில் முழு போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் ‘டயானா’ உடல் அடக்கம்

கோவையில் முழு போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் ‘டயானா’ உடல் அடக்கம்

 

கோவை மாநகர துப்பறியும் பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் “டயானா” உரிய மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பிறந்தது “டயானா”. கடந்த 01.07.2017ம் தேதி முதல் மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 01.11.2017 முதல் 29.04.2018 வரை 6 மாத காலம் போதை பொருட்கள் கண்டுபிடிப்பு பயிற்சி பெற்று, இரயில் நிலையம் ஏர்போர்ட், பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 09.01.2022ம் தேதி முதல் உடல் நிலை சரியில்லாமல் (கிட்னி பிரச்சனை) சிரமப்பட்டு வந்தது. சென்னையில் உள்ள அரசு பன்முக கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தது.பின்னர், சிகிச்சை முடிந்து 08.07.2022ம் தேதி சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, வேப்பேரியில் சிகிச்சை முடித்து மீண்டும் கோவைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 02.00 மணியளவில் துப்பறியும் நாய் “டயானா” கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படைப் பிரிவில் உயிரிழந்தது.

கோவை அரசு பன்முக கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் மரணமடைந்த டயானாவின் உடல், துப்பறிவு பிரிவு அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு, துப்பறியும் பிரிவு உயர் அதிகாரிகள் தலைமையில் காவல்துறையினர் மரியாதை செய்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.