சின்ன வெங்காயத்தை நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் – விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசே விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் 18 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்வோம்.
இந்த காலகட்டத்தில் அதிக மழை பெய்தாலோ, பனி மற்றும் வெயில் அடித்தாலோ சின்ன வெங்காயம் விவசாயம் பாதிக்கப்படும்.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சின்ன வெங்காயத்தின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்து சரிவை சந்தித்து வருகிறது.
மேலும், கடந்த வாரம் மழை பெய்ததால் நடவு செய்து 45 நாட்களே ஆன சின்ன வெங்காயம் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, பெருக்காமல் சிறிய அளவிலேயே நின்று விட்டது. இதனால் வெளிமார்க்கெட்டுக்கு இதனை விற்பனை செய்ய முடியாது.
ஆகவே அரசு தோட்டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்வதோடு, அரசே சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்யவும், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது