சிங்காநல்லுார் சிக்னல் சிக்கல் ஓவர்… ‘யூ டேர்ன்’ போட்டால் போதும்.. இனி நிற்காமல் போய்க்கிட்டே இருக்கலாம்.!!

கோவை : சிங்காநல்லுார் சந்திப்பில், வாகனங்கள் நிற்காமல் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.கோவை – திருச்சி ரோடு, சிங்காநல்லுார் சந்திப்பில் ராமநாதபுரத்தில் இருந்து வருவோர், ஒண்டிபுதுாரில் இருந்து வருவோர், காமராஜர் ரோட்டில் வருவோர், வெள்ளலுார் ரோட்டில் வருவோர் என, நான்கு வழித்தடங்களில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது; சிக்னலில் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.சிங்காநல்லுார் சந்திப்பில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல, போக்குவரத்து போலீசாரும், மாநில நெடுஞ்சாலைத்துறை (சாலை பாதுகாப்பு அலகு) குழுவினரும் ஆய்வு செய்தனர்.சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை, அப்பகுதியில் உள்ள இட வசதி, ரோட்டோர ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில், சிக்னலுக்கு அருகில் இரு இடங்களில், ‘யூ டேர்ன்’ வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணனுடன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) மனுநீதி ஆலோசித்து, ‘யூ டேர்ன்’ செல்வதற்கான ஏற்பாடுகளை நேற்று மேற்கொண்டார்.இதற்கேற்ப, மையத்தடுப்புகளை இடிக்கும் பணி நேற்று நடந்தது; ‘யூ டேர்ன்’ செய்ய கற்கள் அடுக்கும் பணி நடைபெற உள்ளது.இனி போய்க்கிட்டே இருக்கலாம்!ஒண்டிபுதுாரில் இருந்து கோவை நோக்கிச் செல்ல வேண்டியவர்கள், நிற்காமல் நேராக செல்லலாம்; வரதராஜபுரம் ரோட்டுக்குச் செல்ல சிக்னலை கடந்து, ‘யூ டேர்ன்’ எடுத்து பயணிக்க வேண்டும்.

இதேபோல், ராமநாதபுரத்தில் இருந்து ஒண்டிபுதுார் நோக்கிச் செல்வோர், சிக்னலில் நிற்காமல் நேராக செல்லலாம்.வெள்ளலுார் செல்ல வேண்டியவர்கள் சற்று துாரம் சென்று, ‘யூ டேர்ன்’ எடுத்து பயணிக்க வேண்டும். காமராஜர் ரோட்டில் இருந்து வருவோர் வெள்ளலுார் ரோட்டுக்கோ அல்லது ராமநாதபுரம் நோக்கியோ செல்ல வேண்டுமெனில் இடது புறம் திரும்பி, ‘யூ டேர்ன்’ பகுதியில் திரும்பி, நிற்காமல் செல்லலாம்.மேம்பாலம் வரும் வரை!சிங்காநல்லுார் சிக்னல் பிரச்னைக்கு தீர்வு காண முன்னதாக, ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி, சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து, மேற்கு மின்வாரிய அலுவலகம் முன் வரை, 2,400 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இதற்கு, ரூ.141.80 கோடி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, வேலையை துவக்கும் நேரத்தில், ‘மெட்ரோ’ ரயில் திட்டத்தை காரணம் காட்டி, மேம்பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காத்திருப்பை தவிர்க்க, யூ டர்ன் போடும் வசதி அறிமுகமாகிறது.