தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது அவரை வரவேற்கும் விதமாகத் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு டெல்லியில் உள்ள பள்ளிகளின் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விளக்கிக் கூறினார்கள். மேலும் கல்வி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பின்போது, விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வருடனான தனது சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில், “கல்வி மட்டுமே சிறந்த சமுதாயத்தையும், சக்தி வாய்ந்த நாட்டையும் உருவாக்க உதவும். நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்த்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியில் இருக்கும் மாதிரிப் பள்ளியைப் போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும். அப்படி தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்பட்ட பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களின் சார்பில் வரவேற்கவிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்
Leave a Reply