ஷாக்கிங் நியூஸ்… 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து..?

இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு என தகவல்..

இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மற்றும் போதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் NMC-யின் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நாட்டின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை நாட்டில் உள்ள சுமார் 150 மருத்துவக் கல்லூரிகள், போதிய ஆசிரியர்கள் மற்றும் விதிகளுக்கு இணங்காத காரணங்களால் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, நாடு முழுவதும் உள்ள 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துவிட்டன, அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பின்பற்றுகின்றன என்பதை (National Medical Commission)-க்கு காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளது. அதன்படி, என்எம்சியின் பார்வையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில், குஜராத், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் உள்ளன.

சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகள் என ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்திய ஆய்வின்போது இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. சரியான கேமரா பொருத்துதல் மற்றும் அவற்றின் செயல்பாடு உள்ளிட்ட நடைமுறைகளை கல்லூரிகள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. பயோமெட்ரிக் வசதி சரியாக இல்லை. மேலும், பல பணியிடங்கள் காலியாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, அங்கீகாரம் ரத்தாகும் நிலை இருப்பதால், மருத்துவக் கல்லூரிகள் மேல்முறையீடு செய்ய விருப்பம் உள்ளதாகவும் முதல் முறையீட்டை 30 நாட்களுக்குள் NMC இல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பரில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விதிகளை கடைபிடிக்காத அல்லது சரியான ஆசிரியர்களை பராமரிக்காத மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும், நல்ல மருத்துவர்களை உருவாக்க வேண்டும் கூறினார். எனவே, மருத்துவ மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத சூழலில், 150 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற தகவல் நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என கூறுகின்றனர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2023-இல், எண்ணிக்கை 660-ஆக அதிகரித்துள்ளது. இவற்றில், 22 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களாகும், இது 2014 இல் 7 ஆக இருந்தது. இதுபோன்றும், முதுநிலை பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மொத்தம் 65,335 முதுகலை இடங்கள் உள்ளன, 2014-இல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம். 2014-இல் 31,185 முதுகலை மருத்துவ இடங்கள் இருந்தன. மேலும், MBBS இடங்களின் எண்ணிக்கை 1,01,043 என்றும் 2014-இல் இது 51,348-ஆக இருந்தது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட கால் பங்காகக் குறைக்கும் என கூறப்படுகிறது. மேலும், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 1,900 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.