இனி ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!

சிறுதானியங்களின் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில், சர்வதேச சிறுதானிய ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது‌. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் நாளை தொடங்கப்படவிருக்கிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தை ஊட்டி அருகிலுள்ள பாலகொலா வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக் கடையில் தொடங்கி வைக்கவிருக்கின்றனர்.

நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்யப்படவிருக்கிறது. கோதுமைக்கு மாற்றாக ஒரு குடும்பத்துக்கு இரண்டு கிலோ வழங்கப்படும்.

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளில் வழங்க இந்திய உணவு கழகத்தின் மூலம் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும். மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும், சிறுதானிய உணவான கேழ்வரகு உற்பத்தியும் அதிகரிக்கும். வரும் காலங்களில் அரசே நேரடியாக கேழ்வரகைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.