செந்தில் பாலாஜியின் தம்பி அலுவலகத்துக்கு சீல்… அமலாக்கத்துறை ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு..!

ரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு இன்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

மேலும் அதன் அருகே ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் அசோக், உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழில்அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நேற்று கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த முறை வருமான வரி சோதனையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்றைய சோதனையை அமலாக்கத்துறையினர் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக தான் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைகள் நடத்திய நிலையில் இன்று சீல் வைத்தனர்.

மேலும் சீல்வைத்த அலுவலகத்தில் அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவதுஅமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது. சென்னையில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜியின் தம்பிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.