கெடு விதித்த செந்தில் பாலாஜி… ஆளுநரை சந்தித்து அண்ணாமலை புகார் மனு.!!

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார்.

கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.

கோபாலபுரத்தை சேர்ந்த நபர் பி.ஜி.அர். நிறுவனத்துக்கு பணம் கொடுத்து இருக்கிறார். பி.ஜி.ஆர். எனர்ஜிக்கும் திமுகவுக்கும் இரத்த பந்தம் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நான் குற்றம்சாட்டியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பி.ஜி.ஆர். நிறுவனத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்தான். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது இதே பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத்தை வாங்கினார்கள்.

2010 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. தணிக்கையில் பி.ஜி.ஆர். எனர்ஜியால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பி.ஜி.ஆர். நிறுவனத்தால் அந்த தொழில்நுட்பத்தை முறையாக கையாள முடியவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக லாபத்தையே காட்டாத பி.ஜி.ஆர். நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான். 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்தில் சோதனையிட்டபோது போலியாக ரூ.113 கோடி பில் கண்டெடுக்கப்பட்டது. அந்த ரூ.113 கோடி அரசு அதிகாரிகளும் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

திடீரென பி.ஜி.ஆர். நிறுவனம் எப்படி புனிதமாக மாறியது. அவர்கள் மீது ஏதாவது தீர்த்தம் தெளிக்கப்பட்டதா? நமது கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.36,000 கோடி அளவுக்கு பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ கொடுக்க உள்ளது. இதுகுறித்து செபிக்கு தமிழ்நாடு பாஜக புகார் கடிதம் எழுத உள்ளது. அதேபோல் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.” என்றார்.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த செந்தில்பாலாஜி, “பாஜக தலைவர் அண்ணாமலை தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். அண்ணாமலை ஒரு விழாவில் 20,000 புத்தகங்களில் படித்துள்ளேன் எனப் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சித்த செந்தில்பாலாஜி, “BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை.” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற அண்ணாமலை ஆர்.என்.ரவியை சந்தித்து மின்வாரியம் – பி.ஜி.ஆர். நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் குறித்து புகாரளித்து உள்ளார். இதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.