பரிசு பொருள் விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி கோவை வாலிபரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி..!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). கார் டிரைவர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில் எனக்கு பரிசு விழுந்திருப்பதாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒருவர் எனக்கு போன் செய்தார். இந்த மர்ம நபர் என்னிடம் பரிசை அனுப்ப வேண்டுமானால் அதற்கு ஜி.எஸ்.டி வரி, ஆர்.பி.ஐ வரி, அனுப்புவதற்கான தொகை ஆகியவற்றினை செலுத்த வேண்டும். அதற்கான பணத்தை முதலில் நீங்கள் அனுப்புங்கள் என ஒரு வங்கி எண்ணை கொடுத்தனர். இதனை உண்மை என நம்பிய நான் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.13,20,000-யை அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் சொன்ன படி எனக்கு எந்த பரிசு பொருட்களும் கிடைக்கவில்லை.

மேலும் நான் செலுத்திய பணத்தையும் எனது கணக்கில் வரவு வைக்க முடியவில்லை.அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். போலியான குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் என்னிடம் பணத்தை மோசடி செய்துள்ளனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் உடனே நான் இது குறித்து போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.