சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் பொள்ளாச்சி இளநீர் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு..!

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் செவ்விளநீர், பச்சை நிற இளநீர்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் தேவை அதிகமாக இருப்பதால் இங்கிருந்து அதிகளவிலான இளநீர்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வெயிலின் தாக்கத்தின்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செவ்விளநீர் விற்பனை அதிகமாக இருந்தது. கோடை மழைக்கு பின்பு ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை என தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதன் பின்பு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீண்டும் இளநீர் விற்பனை சூடுபிடித்தது. இதற்கிடையே மீண்டும் பல மாவட்டங்களில் மழை பெய்ததால் பொள்ளாச்சியில் இருந்து இளநீர் அனுப்பும் பணி குறைந்தது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு குறைவான விலைக்கு அதிகளவு அனுப்பப்பட்டன. கடந்த சில நாட்களாக டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி காரணமாக அந்த மாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை குறைந்து சகஜ நிலை திரும்பி உள்ளதால் பொள்ளாச்சியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கனரக வாகனங்களில் இளநீர் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. இளநீர் அதிகமாக அனுப்பப்பட்டாலும், உற்பத்தி அதிகரிப்பு காரணமாக அதன் தேக்கத்தை தவிர்க்க கடந்த மாதம் ரூ.18 ஆக இருந்த பண்ணை மொத்த விலை தற்போது ரூ.16 ஆக சரிந்துள்ளது.
இதற்கிடையே சபரிமலை சீசன் தற்போது தொடங்கி உள்ளதால் கேரளாவில் இளநீர் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரை பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் பொள்ளாச்சி இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கூடுதலாக இளநீர் அனுப்பப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் இளநீரே அனுப்பப்பட்டது. இந்த ஆண்டில் உற்பத்தி அதிகரிப்பால் குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி மாதம் வரை இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், அதன் விலை சரிவு ஏற்படும் என்றும், இளநீர் தேக்கத்தை தவிர்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரமாக நடப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.