விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிறந்து ஒருமாதமே ஆன குழந்தையை நெல்லை தம்பதிக்கு விற்றத் தகவல் அம்பலமானதைத் தொடர்ந்து பெற்றோர், செவிலியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிங்கம்பட்டி ஈஸ்வன் காலணியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம்(24) தம்பதிகள் இருவருமே பட்டாசு ஆலை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். ஏற்கெனவே இவர்களுக்கு மூன்றுக் குழந்தைகள் இருக்கும் நிலையில் பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பம் தரித்தார். இவர் மாரனேரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு செவிலியராக இருக்கும் முத்துமாரியிடம், அவருக்குத் தெரிந்த ஒப்பந்த செவிலியர் அஜிதா என்பவர் தன் உறவினர் தாமரை என்பவருக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு குழந்தை தேவை. ஏற்கெனவே மூன்று குழந்தைகள் இருக்கும் இவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் எனக் கூறினார். முத்துமாரியும், அஜிதாவோடு இவர்களுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்தினார்.
ஒப்பந்த செவிலியர் அஜிதாவுக்கு நாகர்கோவில் ஆகும். இந்தநிலையில் கடந்த ஜனவரி 23-ம் தேதி பஞ்சவர்ணத்திற்கு பெண்குழந்தை பிறந்தது. இதை அஜிதா தன் சித்தி தாமரையிடம் தெரிவித்தார். இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த ஜார்ஜ்- சார்லட் தம்பதியினர் நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்ததால் இந்தக் குழந்தையை வாங்க விரும்பினர். பேச்சிமுத்து என்பவர் இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டார். முதலில் நடந்த பேச்சுவார்த்தையில் பட்டாசுத் தொழிலாளியும், குழந்தையின் தந்தையுமான பாண்டீஸ்வரன் தம்பதிகளிடம் மூன்று லட்ச ரூபாய் தன் குழந்தையை விற்கக் கேட்டார். ஆனால் தொகை அதிகம் எனச் சொல்லி நெல்லை தம்பதியினர் வேண்டாம் என வந்துவிட்டனர்.
அதன்பின்னர் குழந்தையை மீண்டும் நெல்லைக்கே எடுத்துச் சென்று பாண்டீஸ்வரனும், அவரது மனைவியும் 70 ஆயிரம் ரூபாய்க்கு அதே தம்பதியிடம் விற்றனர். இதில் 40 ஆயிரம் ரூபாய் முன்பணமும் பெற்றனர். ஆனால் விற்றபின்பு தம்பதிக்குள் தொடர்ந்து பிரச்சினை நிலவ, குழந்தையின் பாட்டியான பஞ்சவர்ணத்தின் தாய் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார், “குழந்தையின் பெற்றோர் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், சார்லட், தற்காலிக செவிலியர் அஜிதா, நிரந்தர செவிலியர் முத்துமாரி ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகின்றனர். போலீஸார் குழந்தையையும் மீட்டனர்.
Leave a Reply