விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை… வழக்கு தொடர விரைவில் அனுமதி..?

சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த நேரமும் ஒப்புதல் தந்துவிடுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்றார். அத்துடன் டெங்கு, மலேரியா போன்றவற்றுடன் சனாதனத்தை ஒப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சு மிகப் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அமைச்சரவையும் பிரதமர் மோடி தலைமையில் கூடிய போது இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சனாதனம் குறித்து உரிய பதிலடி தர வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி விலை பேசியதும் சர்ச்சையானது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல மாநிலங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமைச்சர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதேபோல உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜகவினர் நேற்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரவும் பாஜக தரப்பில் ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதன சர்ச்சை குறித்து விரிவான அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சனாதனத்தை பொதுவெளி, அரசு நிகழ்ச்சிகளில் ஆதரித்து பேசி வருபவர். இதனாலேயே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்தார். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் அமைச்சர் உதயநிதி மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கடும் அதிருப்தியில் இருப்பது இயல்பானதுதான் என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டாரங்கள். இதனாலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர விரைவிலேயே அனுமதி கொடுத்துவிடுவார் ஆளுநர் ஆர்.என்.ரவி என நம்பிக்கையோடு காத்திருக்கிறதாம் சுப்பிரமணியன் சுவாமி உட்பட பாஜக தரப்பு..