கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் 2 – ஆம் பீடாதிபதியாக சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பட்டம் ஏற்றார்.!!

கோவைஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் 1970-ம் ஆண்டு கந்தசாமி தேவர் – குணவதி தம்பதியருக்கு 5-வது மகனாக சிவலிங்கேஸ்வரர் பிறந்தவர். பள்ளிப்படிப்பு வரை படித்தவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையினை கண்டெடுத்து அப்பகுதியில் கோவில் அமைத்து வழிபாடுகள் செய்து வந்தார். .இவரது அருட் சக்தியினை அறிந்த பக்தர்கள் இவரது அருள் வாக்கினை கேட்க வருகை புரிந்தனர்.
இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. சிரவை ஆதீனம் தவத்திரு .சுந்தர சுவாமிகளிடம் ஆன்மீக பயிற்சி மேற்கொண்ட, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தமது ஆலயம் அமைந்துள்ள இடத்திலேயே காமாட்சிபுரி ஆதீனமாக மாற்றி அமைத்து, அனைவருக்கும் ஆன்மீகத்தையும், சக்தி வழிபாட்டினையும் உலகம் முழுவதும் பரப்பினார். தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு, முழு செலவையும் ஏற்றுக்கொண்டு திருக்குடமுழுக்கு செய்து வைத்தார். பல்லடம் சித்தம்பலம் அருகே கோளறு பதிநவகிரக கோட்டை என்ற பிரம்மாண்ட கோயிலை உலகின் முதல் முதலாக நிறுவினார்.
கோவை காமாட்சிபுரம் ஆதீனத்தில் 51 சக்தி பீடம் அமைத்து அருளாட்சி செய்து வந்தார் . பல வெளிநாடுகளுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகைக்கு திருவாதவூரில் திருக்கோவிலை அமைத்து, செவ்வனே திருக்குட நன்னீராட்டு நடத்தியவர் . தேசியமும், தெய்வீகமும் என வாழ்ந்த பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையினை உலகம் அறிய செய்தவர். தீரன் சின்னமலை மீது தீராத பக்தி கொண்டவர்.அங்குத் தாய் என்ற மாத இதழ் மூலம் தமது ஆன்மீக செறிவூட்டும் கருத்துக்களை அகிலத்திற்கு அளித்துச் சென்றவர். ஆண்டுதோறும் அனைத்து கலைஞர்களுக்கும் விருது கொடுத்த மகிழ்ந்தவர். வடலூர் ஊரன் அடிகளார், “நடமாடும் நாவுக்கரசர்” -என்ற பட்டத்தினை நமது சிவலிங்கேஸ்வர சுவாமிகளுக்கு வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார் .
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் முக்தி அடைந்த போது, தாமே முன் நின்று நல்லடக்கம் செய்தவர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முக்தி அடைந்த போது, அவருக்கு இறுதி வழிபாடுகளை செம்மையுற செய்தவர் தம்மை சந்திக்க வரும் பக்தர்களை அதிக அக்கறையுடன் விசாரித்து அவர்களுக்கு நல்வழி காட்டியவர்.உலகில் உள்ள அனைத்து ஆதீனங்கள், மடாதிபதிகளுடன் நட்புறவை பேணியவர்.

இதனால் இவரை ஆதீனங்களின் “தள கர்த்தர்” என கொண்டாடி மகிழ்ந்தனர். இந்து மதத்திற்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வந்த போது முதல் ஆளாக களத்தில் நின்று போராடியவர். துணிச்சலுக்கு பெயர் பெற்ற சிவலிங்கேஸ்வர சுவாமிகள் என்ற இந்த வீரத் துறவி, தமது 55 வயதில் முக்தி அடைந்தார். கடந்த 8-ஆம் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வை சிறப்பித்தவர், அன்றிலிருந்து 6 நாட்களுக்குள் தாம் முக்தி அடைந்து விடுவேன்” என தெரிவித்திருந்தார். சுவாமிகளின் எண்ணத்தைப் போலவே சிவராத்திரி கழித்து 4-வது நாள் இறைவன் திருவடிப்பேற்றை அடைந்து விட்டார் .
இறைவன் நேரடியாக தோன்றாமல், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் போன்ற மகான்கள் வடிவத்தில் வந்து பக்தர்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்பது நிதர்சனம்.2-ம் பீடாதிபதியாக பதவி ஏற்றுள்ள பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகளின் இயற்பெயர் ஆனந்த பாரதி.
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை பூர்வீகம் கொண்ட இவரது பெற்றோர் கண்ணன் – சரஸ்வதி தம்பதியர். 11.07.1994-ம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்த இவர், தமது 12 வயதிலேயே காமாட்சிபுரி ஆதீனம் வந்து பயின்றவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தவர். ஆதீனத்திலேயே இருந்து கொண்டு சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி , சமய பயிற்சி வழிபாட்டு முறைகள், பக்க வாத்தியங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்டவளை கற்றுத் தேர்ந்தவர். தமது 30-வது வயதில் இப் பொறுப்பினை ஏற்றுள்ளார்..