கோவை சாய்பாபா காலனி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ 75 கோடி மதிப்பில் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை கடந்த 2024 -ம் ஆண்டு தொடங்கியது .கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற மேம்பால பணிகள் உயர் அழுத்த மின்கம்பியை மாற்றி அமைப்பது பாதாள சாக்கடை வடிகால் குழாய்களை மாற்றி அமைப்பது உள்ளிட்டால் தாமதமானது. அதன் பின்னர் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதமே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் முடிவடையாமல் இருந்தது. இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலத்தின் இரு பக்கவாட்டில் சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் கூட எழுதில் செல்ல முடியாது நிலை உருவானது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பணிக்கு செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். தற்போது மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மேம்பால ஏறுதளம். இறங்குதளம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது வர்ணம் பூசும்பணி நடக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் வருகிற 7-ந் தேதி போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும். அதன் பிறகு மேம்பாலத்தின் பக்கவாட்டு சாலைகளில் சாக்கடை வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். அப்போதும் மேம்பாலத்தின் பக்கவாட்டு சாலைகளில் 15 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்படும். அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர் மேம்பாலம் முறைப்படி திறந்து வைக்கப்படும் .அதன் பிறகு முழுமையாக போக்குவரத்து நடைபெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
சாய்பாபா காலனி மேம்பாலம் 7-ந் தேதி திறப்பு







