No Driver… No Signal… விண்வெளியில் இருந்து இயக்கும் புல்லட் ட்ரெயின்

நம் அண்டை நாடான சீனா இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே எட்ட முடியாத அளவுக்கு வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. 2000-களின் தொடக்கத்தில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த சாலை உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சீனா, சாலைகளோடு சேர்த்து அதிவேக ரயில்களுக்கான உத்தியைக் கையில் எடுத்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கே 70,000 கி.மீ தான். ஆனால், சீனா 2008-க்குப் பிறகு வெறும் 18 வருடங்களில் சுமார் 50,000 கி.மீ தூரத்திற்குப் புல்லட் ரயில் பாதைகளை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது. இதனை 2030-க்குள் 60,000 கி.மீ ஆக உயர்த்தவும் பிளான் போட்டுள்ளனர்.

மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ரயில்கள் பறக்கும்போது ஒரு சிறிய சிக்னல் கோளாறு ஏற்பட்டால் கூட அது பேராபத்தாக முடியும். அப்படி ஒரு கோர விபத்து கடந்த 2011-ல் சீனாவின் ‘வென்சோ’ (Wenzhou) பகுதியில் நடந்தது. அங்கு ஏற்பட்ட பயங்கர மின்னல் தாக்கத்தால் தரைமட்ட சிக்னல் சிஸ்டம் முற்றிலும் எரிந்து போனது. சிக்னல் பழுதடைந்து தெரியாத கட்டுப்பாட்டு மையம், ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்களையும் முன்னேற அனுமதித்ததால், அவை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்திற்குப் பிறகு, தரையில் இருக்கும் சிக்னல் அமைப்புகளை நம்புவதை நிறுத்த முடிவு செய்த சீன விஞ்ஞானிகள், புல்லட் ரயில்களை விண்வெளியில் இருந்து இயக்கும் அதிரடித் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். பூமியின் தாழ் வட்டப் பாதையில் (Low Earth Orbit) சுற்றும் பல நூறு குட்டி செயற்கைக்கோள்கள் இனி புல்லட் ரயில்களின் ‘கண்களாகவும் காதுகளாகவும்’ செயல்படும்.

நமது மொபைலில் கூகுள் மேப்ஸ் வேலை செய்வது போலவே, ஒவ்வொரு ரயிலின் வேகம் மற்றும் இருப்பிடம் குறித்த சிக்னல்கள் நொடிக்கு நொடி விண்வெளிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்குப் பகிரப்படும். இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் இருந்து கட்டுப்படுத்தப்படுவதால் மேகமூட்டம், பெருவெள்ளம், நிலநடுக்கம், மின்னல் எனத் தரையில் நடக்கும் எந்தவொரு இயற்கை சீற்றமும் சிக்னல் அமைப்பைப் பாதிக்காது.

இந்த சிஸ்டம் முழுமையடையும் போது ரயில்களுக்கு ஓட்டுநர்கள் தேவைப்பட மாட்டார்கள். தண்டவாளத்தில் சிக்னல் கம்பங்களோ, ஸ்டேஷன்களில் பச்சை, சிவப்பு கொடிகளோ இருக்காது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வாய்ப்போ 0% ஆகக் குறைந்துவிடும்.