சபாஷ்! சரியான போட்டி… எடப்பாடி கண்ணை உறுத்தும் கட்சியின் “செக் லீஃப்… திமுகவிடம் ரகசிய உறவு வைத்துள்ள இபிஎஸ்..? போட்டுக்கொடுத்த ஓபிஎஸ் டீம்..!

சென்னை: அதிமுகவில் செக் லீஃப் விவகாரம் ஒன்று தற்போது உச்சம் பெற்றுள்ளது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வரும் நிலையில்தான் தற்போது செக் லீஃப் விவகாரம் உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் நேற்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால் இந்த படிவத்தை சமர்பிக்காத காரணத்தால் அதிமுக வேட்பாளர்கள் எல்லோரும் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது.

இந்த ஏ , பி படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில், படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன். நீங்கள் கையெழுத்து போட தயாரா? ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் கையெழுத்து போடுகிறேன்.. நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போடுவீர்களா என்று கேட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ.. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே கிடையாது. அந்த பதவி காலாவதியாகிவிட்டது. சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை. அதனால் நீங்கள் இதில் கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதாவது ஓ பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி வரும் நிலையில்தான் தற்போது செக் லீஃப் விவகாரம் உருவெடுத்துள்ளது. கட்சி விதிப்படி அலுவலக நிர்வாகிகள், கட்சியில் சம்பளம் பெறும் ஊழியர்கள், தினசரி பேட்டா பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தை விடுவிக்க வேண்டும். இதற்கு கட்சி நிதியில் இருந்து பணம் தர வேண்டும். அதற்கு பொருளாளர் கையெழுத்து போட வேண்டும்.

இதற்காக பொருளாளர் பதவியில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டு அதை எடப்பாடிக்கு அனுப்பி உள்ளார். செக் லீஃபிற்கு ஒப்புதல் வழங்கும் படிவத்தில் இறுதி கையெழுத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட வேண்டும் என்பதால், அந்த படிவத்தை எடப்பாடிக்கு ஓபிஎஸ் அனுப்பி உள்ளார். ஆனால் இதிலும் எடப்பாடி கையெழுத்து போட மறுத்துவிட்டார் என்கிறார்கள். நான் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது. அதனால் கையெழுத்து போட மாட்டேன் என்று எடப்பாடி கூறிவிட்டாராம்.

இதனால் அதிமுகவில் சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கு ஓபிஎஸ் பொருளாளராக இருப்பது பிடிக்கவில்லை. கட்சியின் செக் புக் ஓபிஎஸ் கையில் இருப்பது எடப்பாடி கண்ணை உறுத்துகிறது. பொதுக்குழுவில் ஓபிஎஸ்தான் கட்சி கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் ஓபிஎஸ்சை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன், திமுகவுடன் எடப்பாடி ரகசிய உறவு வைத்துள்ளார். திமுக ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும் என்றுதான் எடப்பாடி தேர்தல் படிவம் ஏ, பியில் கையெழுத்து போடவில்லை. அதோடு கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளின் சம்பள படிவத்தில் கூட கையெழுத்து போடவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார்