திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கத்தகடுகளை ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் பேத்தியை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் பேத்தி தங்கத் தகடுகளில் இருந்து உருக்கி எடுத்த தங்கத்தை கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த கோவர்தன் என்ற நகை வியாபாரியிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணைக்காக போலீசார் உண்ணிகிருஷ்ணன் பேத்தியை நேற்று கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின்னர் அந்த நகை வியாபாரியிடமும் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபுவை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தீர்மானித்துள்ளனர். உண்ணிகிருஷ்ணன் பேத்தியிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






