ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான ஸ்டேட் டூமாவின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் கடந்த 18ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் 450 இடங்களில், கட்சிகளுக்கு என 225 இடங்களும், எம்பிக்களுக்கு என 225 இடங்களும் ஒதுக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் தொகுதி எம்பிக்கென ஒரு வாக்கும், விரும்பும் கட்சிக்கு என ஒரு வாக்கும் செலுத்த வேண்டும்.இதில், கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 225 இடங்களில் யுனைடெட் ரஷ்யா 58 சதவீத வாக்குகள் பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது.
225 எம்பிக்களுக்கான இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் 208 பேர் முன்னிலை வகிப்பதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. அதே ஆண்டில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவே உக்ரைன் போரை கடுமையாக எதிர்த்த யாப்லோகோ எதிர்க்கட்சி தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.








