சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி உறவினர் சந்திரசேகர்; அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 500 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாக வைத்து எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தை, ராமநாதபுரம் மாவட்டம், கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை நடத்தி வருகிறார்.மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலைகள் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் என, அனைத்து ஒப்பந்தப் பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.வரி ஏய்ப்பு புகாரையடுத்து, அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள உரிமையாளர் வீடு உட்பட, 12க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய உறவினரும், அ.தி.மு.க.,வின் ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகருக்கு சொந்தமான, கோவை வடவள்ளியில் உள்ள வீடு, ஓணாப்பாளையம் பங்களாவில் சோதனை நடந்தது.இதே போல, கே.சி.பி., நிறுவன செயல் இயக்குனர் கார்த்திக் வீடு, சந்திரசேகர் தந்தை ராஜன், தம்பி செந்தில் பிரபு வீடு, புளியகுளம், ‘ஆலயம் அறக்கட்டளை’ அலுவலகங்கள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இதுகுறித்து, வருமான வரித் துறை கமிஷனர் ராகேஷ் குப்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கட்டட பணிகள், ரியல் எஸ்டேட் தொழில், விளம்பர நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இரண்டு குழுமங்களில், 6ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட, 40 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இதில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
Leave a Reply