பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.40 லட்சம் பறிமுதல்.!!

கோவை : பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 40 லட்சம் பறிமுதல செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. இதை மீறுபவர்களை கண்காணிக்க பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வட்டார வளர்ச்சி அதிகாரி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, உதவியாளர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்ளனர. இவர்கள் நேற்று அந்தப் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பொள்ளாச்சி ராமபட்டினம் அருகே சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கொண்டு வந்த ரூ 3 லட்சத்து 37 ஆயிரத்து 400 மற்றும் கோபாலபுரத்தில் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 40 ஆயிரம், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பைசல் என்பவர் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 500,நல்லூர் கைகாட்டி அருகே நெகமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கோபாலபுரம் சோதனை சாவடியில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு பகலாக சோதனை நடந்து வருகிறது..