ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா: தூத்துக்குடியில்முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.!!

தூத்துக்குடி: இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

துறைமுக நகரமான தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.1,000 கோடியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பர்னிச்சர் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா, தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 7) காலை10 மணி அளவில் நடக்க உள்ளது.விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

பர்னிச்சர் தொழிலுக்கென தனியாக நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம்பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் அங்கு இடம்பெறும்.

இந்த பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாலையில் நாகர்கோவில் செல்லும் முதல்வர், அங்கு மழை வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.