38 ஆயிரம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி ரத்து… கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட 37,984 பேரின் நகைக்கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 2021 மார்ச் 31 வரை நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய 2021 நவ. 1ல் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ‘பயிர்க் கடன் தள்ளுபடியில் பயன்பெற்றவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை’ உட்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன.

அதன் அடிப்படையில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வங்கிகளில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. இறுதியாக 14.50 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பெற்ற 6,000 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதிக்கட்ட தேர்வான பயனாளிகளிடம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் திரும்ப வழங்கும் பணி துவங்கியது. அந்த பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அதில் அரசு ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 37,984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறிப்பட்டு உள்ளது.

எனவே, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அசல் மற்றும் வட்டி தொகையான 160 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யக் கூடாது என மண்டல இணை பதிவாளர்களுக்குகூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.