பழனி முருகன் கோவிலில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்.!!

முருகனின் அறுபடைவீடுகளில் 3 வது படைவீடாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.

இந்த மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை இரண்டுமே உள்ளது. இத்துடன் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன.

விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. ரோப்கார் சேவைக்காக, அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் நிலையங்கள் உள்ளன. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காற்று அதிகமாக வீசும்போது அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

பராமரிப்பு பணிக்காக தினசரி ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜூன் மாத பராமரிப்பு பணிக்காக பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின்இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.