சென்னையில் சளி, காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தேங்கிய வெள்ளநீரில் கழிவுநீர் கலந்து காணப்பட்டது. தண்ணீர் வடிய 2 அல்லது 3 நாட்கள் ஆனது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளில் மக்கள் தவித்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.

இந்த பாதிப்பு முடிவதற்குள் குளிர் காலம் தொடங்கி விட்டது. பொதுவாக குளிர்காலத்தில் குளிர் காற்று காலை, மாலை அதிகமாக வீசும். இந்த குளிர் காற்றில் வைரஸ் எளிதில் உருவாகும் அதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை ஏற்படும். தற்போது இத்துடன் புயல் பாதிப்பும் சேர்ந்து கொண்டதால் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சளியால் பாதிக்கப்படுபவர்கள் 15 நாட்களுக்கும் மேலாக அவதிப்படுகின்றனர். நெஞ்சு சளி, வறட்டு இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுத்தடுத்து சிரமப்படுகின்றனர்.

சிலர் இரவு முழுவதும் தூங்க முடியாமல் இருமிக்கொண்டே இருக்கின்றனர். மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இதற்காக ஆவி பிடிப்பது, மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவது என்று பல வகையில் முயன்று பார்க்கின்றனர். மேலும் வீட்டில் கசாயம் காய்ச்சி குடிக்கின்றனர். சிலர் கபசுர குடிநீரையும் பருகுகின்றனர். கடைசியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில், நீர் மற்றும் கொசுக்கள் (water and vector borne disease) மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். தற்போது வெப்பநிலை குறைந்து உள்ளதால் பல விதமான வைரஸ் எளிதாக பரவும். குறிப்பாக ரைனோவைரஸ்,அடினோ வைரஸ் உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வைரஸ் எளிதில் மக்களை பாதிக்கும். இதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை உருவாகும். அதேபோல முறையாக சுத்தம் செய்யப்படாத நீரை பருகும் போது, சுத்தமில்லாத உணவை சாப்பிடும் போது ரோட்டா வைரஸ் பரவல் இருக்கும்.

குறிப்பாக இது குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் இதனால் வயிற்று போக்கு ஏற்படும். எனவே சுத்தமான தண்ணீர், குளோரின் கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள், மூச்சு பிரச்னை , சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் காலை மாலை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஈரப்பதத்துடன் காற்று வீசுவதால் குழந்தைகள் எளிதாக பாதிக்கப்படுவார்கள் எனவே அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கையுடன் வெளியில் அனுப்பவேண்டும். வெளியில் மற்றும் முறையாக சமைக்கப்படாத உணவை சாப்பிட கூடாது. நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை பருக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.