நேற்று ராஜினாமா… இன்று பதவியேற்பு.. முதல்வராக இன்று ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் … துணை முதல்வராகிறார் தேஜஸ்வி..!

பாட்னா: பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ்குமார் இன்று பதவியேற்கிறார்.

துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். பாட்னாவில் இனறு மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

2020-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டது.

அந்த தேர்தலில் பாஜக 77; ஜேடியூ 45 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன என்றாலும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார்.

இதையடுத்து, நிதிஷ்குமார் அமைச்சரவையில் 16 பாஜக அமைச்சர்கள் இடம்பெற்றனர். ஆனால், ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் மனக்கசப்புடன் இருந்துவந்தவர் நிதிஷ்குமார். இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.எந்நிலையிலும் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றவாறு நேற்றைய தினம் ஜேடியு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் அவசர கூட்டத்தையும் கூட்டியிருந்ததால், கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. அதனால், பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார். இதையடுத்து, நேற்றைய தினம் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஆட்சியும் கவிழ்ந்தது.

பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன்பிறகு, அங்கிருந்து நேரடியாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு நிதிஷ் சென்றார். அங்கு தேஜஸ்வி யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்டது.பிறகு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் அனைவரும் நிதிஷ் குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மெகா கூட்டணியின் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.தங்களது ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தபோது, அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு இந்த புதிய கூட்டணி அரசு பதவியேற்கிறது. இந்த புதிய அமைச்சரவையில் ஆர்ஜேடி, ஜேடியூ கட்சிகளுக்கு தலா 14 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல, காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த 2 நாட்களாகவே அரசியல் ட்விஸ்ட்கள் காரணமாக பீகார் மாநிலமே பரபரத்து காணப்படுகிறது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், 2020 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களை கைப்பற்றிய நிலையிலும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால், பீகார் மக்களையும், பாஜகவையும் நிதிஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.இதனிடையே பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிதிஷ்குமார் தலைமையில் 35 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய புதிய அரசு மதியம் 2 :00 மணிக்கு பதவியேற்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.