சரமாரியாக கேள்விகள் கேட்ட செய்தியாளர்கள் – நிபந்தனை முடிந்தவுடன் பேசுகிறேன் – யூடியூபர் சவுக்கு சங்கர் பதில்..!

துரை நீதிமன்றத்தில் கையெழுத்துப்போட வந்த சவுக்கு சங்கரிடம், செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது, நிபந்தனை முடிந்தவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் சவுக்கு சங்கர்.

நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் செப்டம்பர் 15-ம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் நிபந்தனையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் விதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன், சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடகூடாது. நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சங்கர் ஆஜராக வேண்டும். நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சங்கர் தெரிவிக்கக் கூடாது” என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, சவுக்கு சங்கர் கடந்த 19-ம் தேதி கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைபடி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜராகி கையெழுத்து போட்டார். இதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். அப்போது சவுக்கு சங்கர், நிபந்தனை இருப்பதால் எதுவும் பேச முடியாது என்றும் நிபந்தனை முடிந்தவுடன் கண்டிப்பாக பேசுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.