போக்குவரத்து சிக்னல்கள் அகற்றம்… கோவை புரூக் பாண்டு சாலையில் ரவுண்டானா அமைக்கப்பட்டதால் வெகுவாக குறைந்தது போக்குவரத்து நெரிசல்..!

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர். கோவை மாநகர போலீசார் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் இந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கோவையில் அதிக போக்குவரத்து நெரிசலும், அதிக நேரம் சிக்னல்காக காத்திருக்க வேண்டி உள்ள தடாகம் சாலையில் லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டது.

அங்கு சோதனை முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது.இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுலபமாக சென்று வருகின்றன. இதனால் இந்த 3 இடங்களிலும் வாகன நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. இதில் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இந்த ரவுண்டானா காரணமாக போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில் புழுதி மண் பரப்பதால் சற்று அவதி அடைந்து வருகின்றனர்.

இதேபோன்று புரூக் பாண்டு சாலையில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும் கோட்டப் பொறியாளா், சாலைப் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த அலுவலா்களுடன் இணைந்து புரூக் பாண்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், புரூக் பாண்டு சாலையில் இருந்து தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, புரூக் பாண்டு சாலையில் இருந்து பூ மாா்கெட், ஆா். எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று, புரூக் பாண்டு சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்துக்கு செல்லும் வாகனங்கள், தேவாங்கபேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல் தொடா்ந்து பயணம் செய்யலாம். தேவாங்கர் பள்ளி சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் பயணத்தை மேற்கொள்ளலாம்.