சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தைப் பாழாக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தைப் பாழாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கான வயதுக் கட்டுப்பாடுகளை நீக்கி செப்டம்பர் 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து எழுந்த அரசியலமைப்பு ரீதியான கேள்விகளை நீதிமன்றம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில், நீங்கள் மதத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட (Hollow out) முடியாது’ என்று இந்த வழக்கை விசாரிக்கும் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்தார்.

இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுத்தீன் அமனுல்லாஹ், அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் தனிநபர்களின் உரிமைகளுக்கும், 26-வது பிரிவின் கீழ் மதப் பிரிவுகளின் உரிமைகளுக்கும் இடையிலான தொடர்பு” குறித்து தனது வாதங்களை முன்வைத்தபோது இந்த கருத்துக்கள் வெளிவந்தன.

பிரிவு 26(பி) மதப் பிரிவுகளுக்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் தங்கள் மத விவகாரங்களைத் தாங்களே நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. அதேசமயம் பிரிவு 25(1) பொது ஒழுங்கு, நெறிமுறை மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சி சுதந்திரம் மற்றும் மதத்தைப் பின்பற்றும், கடைப்பிடிக்கும் மற்றும் பரப்புவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. பிரிவு 25-ன் உட்பிரிவு (2)(ஏ) மத நடைமுறையுடன் தொடர்புடைய பொருளாதார, நிதி, அரசியல் அல்லது பிற மதச்சார்பற்ற நடவடிக்கைகளை முறைப்படுத்த அல்லது கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. உட்பிரிவு (2)(பி) சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்திற்காக அல்லது இந்து மத நிறுவனங்களை அந்த மதத்தின் அனைத்து பிரிவினருக்கும் திறந்து விடுவதற்காக சட்டங்களை இயற்ற அரசை அனுமதிக்கிறது.சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் 25(1)-ன் கீழ் உள்ள அடிப்படை மத உரிமையை அழிப்பதாகும் என்பதால், பிரிவு 25(2)(பி)-யானது 25(1)-ன் கீழ் உள்ள முதன்மை உரிமையைச் சிதைக்கும் அல்லது அழிக்கும் விதமாக விளக்கப்படக் கூடாது” என்று சிங்வி வலியுறுத்தினார்.

பிரிவு 26-ஐப் போலல்லாமல், பிரிவு 25(2)(பி)-இல் பொது ஒழுங்கு, நெறிமுறை மற்றும் ஆரோக்கியம் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று நீதிபதி சுந்தரேஷ் கேட்டார். அதற்கு சிங்வி, “சில நடைமுறைகள் மத ரீதியானதாக இருந்தாலும், அவை ஒரு புறநிலைத் தரத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம் என்பதால்தான் அவ்வாறு உள்ளது. பலதார மணம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்” என்றார்.

தமிழ்நாட்டில் ‘அர்ச்சகர்’ நியமனத்தில் பரம்பரை முறையை ஒழித்து, அது ஒரு மதச்சார்பற்ற பணி என்று கூறி 1972-இல் ‘சேஷம்மாள் மற்றும் பலர் எதிர் தமிழ்நாடு அரசு’ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் முடிவுகளுக்கு நீதிபதி நாகரத்னா ஆட்சேபனை தெரிவித்தார்.

நியமனம் என்பது மதச்சார்பற்றதாக இருக்கலாம், ஆனால் நியமிக்கப்படும் நபர் இறுதியில் மதச் சடங்குகளைச் செய்வதற்காகவே இருக்கிறார். அது மதச்சார்பற்றது அல்ல. இரண்டையும் பிரித்துப் பாருங்கள்… நியமனச் செயல்முறை ஒரு மதச்சார்பற்ற செயல், ஆனால் அவர் ஒரு மத நோக்கத்திற்காக நியமிக்கப்படுகிறார். முழு விஷயத்தையும் மதச்சார்பற்றது என்று சொல்ல முடியாது. அது முரண்பாடானது,” என்று நீதிபதி கூறினார்.

சிங்வி இதற்குப் பதிலளிக்கையில், “அவர்கள் அப்படிச் சொல்லவில்லை. அர்ச்சகர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சடங்குகளை அர்ச்சகர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது மதப் பகுதி. ஆனால்… தகுதி எதுவாக இருந்தாலும் பரம்பரையாக வருபவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்றார்.

மேலும், தீர்ப்பில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் மதம் அல்லாத அம்சங்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அர்ச்சகர் நியமனம் மற்றும் கோயில்களின் தன்னாட்சி குறித்த கேள்வியில், முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான நாயர் சர்வீஸ் சொசைட்டியின் (என்.எஸ்.எஸ்) கருத்திலிருந்து தேவஸ்வம் போர்டு மாறுபட்டது.

என்.எஸ்.எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், “சேஷம்மாள் தீர்ப்பு பிரிவு 16(5)-ஐக் கருத்தில் கொள்ளவில்லை” என்று வாதிட்டார். பொது வேலைவாய்ப்பில் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறும் பிரிவு 16(2), ஒரு மத அல்லது மதப் பிரிவு நிறுவனத்தின் நியமனங்களுக்குப் பொருந்தாது என்று பிரிவு 16(5) கூறுகிறது.

இதற்கு மூத்த வழக்கறிஞர் சிங்வி, பிரிவு 16(5)-ன் பாதுகாப்பு அர்ச்சகர் அதே மதப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டுமே பொருந்தும், ஆனால் 16(2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள மதம் தவிர்த்த பிற காரணங்களால் பொது வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாகுபாட்டை அது ஆதரிக்காது என்றார்.

உதாரணமாக, இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அந்த நிறுவனம் வட இந்திய இந்துக்கள் மட்டுமே வரலாம், தென்னிந்தியர்கள் வரக்கூடாது என்று சொன்னால், அதை நீங்கள் செய்ய முடியாது. மதம் பாதுகாக்கப்படுகிறது, பிற காரணங்கள் அல்ல… நீங்கள் அதன் மதத் தன்மையைப் பாதுகாப்பீர்கள், அதற்காக மற்ற எல்லா வகையான பாகுபாடுகளையும் பாதுகாக்க முடியாது” என்று அவர் சமர்ப்பித்தார்.

மேலும், இந்து மத நிறுவனங்களைத் திறந்துவிடுவது” தொடர்பான பிரிவு 25(2)(பி)-ன் பயன்பாட்டிலும் வைத்தியநாதனுடன் சிங்வி மாறுபட்டார்.மூத்த வழக்கறிஞர் கூறுகையில், “நுழைவு என்ற சொல் கோயிலின் பிரதான வாயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் நுழைவதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் கருவறைக்குள் நுழைவதற்கான உரிமையாக நீட்டிக்க முடியாது.” என்றார்.

ஒருமுறை நுழைவு உரிமையைப் பயன்படுத்திய பிறகு, கோயிலின் எந்த விதிகள் அல்லது பழக்கவழக்கங்களால் வெளியேற்றப்படாமல் வளாகத்திற்குள் நுழைந்தால், அங்கே பிரிவு 26(பி) விதிகளே அமலுக்கு வரும்” என்றார். ஆனால், நுழைவு உரிமைகள் குறித்த முடிவை அந்தந்த மதப் பிரிவினரிடமே விட்டுவிட வேண்டும் என்று வைத்தியநாதன் வாதிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பொதுநல மனுக்களின் ஏற்புத்தன்மை குறித்த சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, “மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கை தவறானது அல்லது பிழையானது என்று ஒரு நீதிமன்றம் பிரகடனம் செய்வதுதான் மிகக் கடினமான பணியாக இருக்கும்” என்றார்.இந்த விசாரணை வியாழக்கிழமையும் தொடரும்.