கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு – உரியவர்களிடம் ஒப்படைத்த டிஜிபி சைலேந்திரபாபு ..!

சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.

அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே காவல்மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் ரூ.96 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 156 செல்போன்கள், ரூ.1லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 6 லேப்டாப்கள் மற்றும் ரொக்கம் ரூ.28 ஆயிரம் உட்பட ரயில்பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுஉரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், புகார்தாரர்கள் கலந்து கொண்டுரயில்கள், ரயில் நிலையங்களில் திருடுபோன தங்களது உடைமைகளை பெற்றுக் கொண்டனர். இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, 178 குற்றவாளிகளை கைது செய்து, பயணிகளின் உடைமைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை பாராட்டி, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார்.

அப்போது சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்வேயில் குற்றங்கள் பாதியாக குறைந்துள்ளன. ரயில்வே போலீஸார் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டில்ரயில் கொள்ளை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

 மேலும், ரயில்வே போலீஸாரின் சிறப்பான நடவடிக்கையால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வருவதை கண்டறிவதற்காக 2 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகின்றனர். தற்போது முதல்முறையாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கி வருகிறோம். தலைமறைவு குற்றவாளிகளைப் பிடித்து வருகிறோம். இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.