அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
குற்ற வழக்கு விசாரணைகளில் கைதேர்ந்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பங்கேற்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு சம்பவம் நடந்த நாளில்; சம்பவம் நடந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இறுதியாக 13 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிக்காகக் காத்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிக்காததால், மீதமுள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், கலைவாணன், செந்தில், திலீப், சுரேந்தர், சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து ஆகிய 12 பேரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை 3 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது ராமஜெயம் கொலை சம்பந்தமாக மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும். வேறு வழக்குகள் பற்றிய கேள்விகள் கேட்கக் கூடாது. சோதனையின்போது வழக்கறிஞர்கள் உடனிருக்கவும் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தனர். அதேபோன்றே கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டது. கேள்விகள் கேட்கும்போது அவர்களின் பதிலில் உண்மை உள்ளதா என்பதை அவர்களின் இருதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளின் அளவீடுகளை வைத்து கணக்கிடப்படும். 3 நாட்களில் நடந்து முடிந்த சோதனைக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு சோதனையின் அறிக்கை வந்துள்ளது.
அந்த அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது, திலீப் தவிர மற்ற 11 பேரும் உண்மைத்தன்மை அற்றவர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடு மாறுபட்டுள்ளதால் உண்மையை மறைக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அடுத்தகட்ட அதிரடிக்கு தயாராகி உள்ளனர். அவர்களின் அதிரடி நடவடிக்கை என்ன என்பது சில நாட்களில் தெரியவரும்.
Leave a Reply