மது அருந்திவிட்டு குருத்வாராவுக்குள் நுழைந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த மான்.!!

தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஒன்று அவர் மது அருந்தக்கூடியவர் என்பது.

மது அருந்திய நிலையில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதுதான் அவர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கே மதுபோதையுடன் சென்றவர் அவர். அதேசமயம், தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அவர் மறுத்ததில்லை. தான் ஒரு ‘சோஷியல் ட்ரிங்கர்’ என்றே குறிப்பிடுவார். 2019-ல், கட்சிக் கூட்டம் ஒன்றில், ‘இனி மதுவைத் தொடப்போவதில்லை’ என அறிவித்தார். எனினும், அதன் பின்னரும் அவர் மது அருந்தி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதுண்டு.

இந்நிலையில், பைசாகி புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) பதிண்டா மாவட்டத்தில் உள்ள தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றிருந்த அவர், மது அருந்திய நிலையில் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

மது அருந்திவிட்டு”குருத்வாராவுக்குச் சென்ற பகவந்த மான், போதையில் தடுமாறியபடி வணங்கினார். அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என்று சிரோமணி அகாலி தளத் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்வீந்தர் சிங் பாதல் கூறியிருக்கிறார். முன்பும் இதே போல் பகவந்த் மான் செய்திருக்கிறார் என்றாலும், முதல்வரான பின்னரும் இப்படி மது போதையில் குருத்வாராவுக்குள் நுழைவதை ஏற்க முடியாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஒருபடி மேலே சென்று, போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் மீது பஞ்சாப் டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதற்கிடையே, இது தொடர்பாக சிரோமாணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியும் (எஸ்ஜிபிசி) பகவந்த் மான் மீது குற்றம் சாட்டியிருக்கிறது. மது போதையில் குருத்வாராவுக்குள் நுழைந்ததற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.