பொதுமக்களே உஷார்… வீடுகளில் மட்டும் உயர்கிறது மின் கட்டணம்: சிறு தொழில்களுக்கு கட்டண குறைப்பு பரிசீலனை- செந்தில் பாலாஜி பேட்டி..!

கோவை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண சலுகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நான்கு நாட்கள் பயணமாகச் செல்ல உள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முதல் மூன்று நாட்கள் அரசு விழாக்களில் முதல்வர் கலந்து கொள்கிறார். அதன் பின்னர், நான்காம் நாளில் பொள்ளாச்சியில் நடக்கும் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் நாளை கலந்து கொள்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். கோவையில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நாளை கோவைக்கு வருகை தர உள்ள முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து மின் கட்டணங்களில் ஏதேனும் சலுகைகள் தரப்படுமா என்று கேள்விக்குப் பதில் அளித்த அவர், ” மின்சார துறையில் தமிழ்நாட்டிற்குக் கடந்த சில காலமாகவே பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டண விலையைக் குறைப்பது தொடர்பாகச் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். முதல்வரின் உத்தரவின்படி, மின்சார துறை அதற்கான பரிசீலனையை மேற்கொண்டது. பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்துள்ள ஒழுங்கு முறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும்.

மின் துறையில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்யக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சலுகைகள் தரக்கூடிய அளவிற்கு மின்சார வாரியம் தற்பொழுது உள்ளதா என யோசிக்க வேண்டும். வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எவ்வித மாற்றமும் இல்லை. சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மட்டும் கட்டணத்தை குறைப்பதற்குப் பரிசீலனை மேற்கொள்ளப்படும்” என்றார். இதன் மூலம், வீடுகளுக்கு கட்டண உயர்வு அதிகரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

மேலும் பாஜக குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், “நோட்டா உடன் போட்டியிடுபவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் கோவையில் எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. அந்த நிலையில் இருக்கும் அவர்களை திமுக உடன் ஒப்பிடுவது தவறு. தமிழகத்தில் இல்லாத அவர்களை இருக்கின்றது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது” என்றார்.