ஒருங்கிணைந்த பயிர் வேளாண்மையில் சூடோமோனாஸ் உயிர் பாக்டீரிய முக்கிய பங்கு வகிக்கிறது- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்.!

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்து லட்சுமி கூறியிருப்பதாவது:-
சூடோமோனாஸ் என்பது எதிர் உயிர் பாக்டீரிய வகையாகும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பாக்டீரிய மற்றும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து நன்மை செய்கிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் பயிரில் குலைநோய்,இலைக்கருகல் நோய், கேழ்வரகில் குலைநோய், நிலக்கடலையில் தண்டழுகல் நோய், வேர்அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. சூடோமோனாஸ் பயன்படுத்துவதால் சுற்று சூழல் மாசுபடாமல், ரசாயனங்களின் தேவை குறைந்து அதிக லாபம் பெறமுடிகிறது. நெல் மற்றும் கேழ்வரகு பயிரில் குலைநோய், இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த 0.2 சத கரைசலை நடவுக்குப் பின்னர் 10 மற்றும் 45–ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.விதைகளை விதைப்பதற்க்கு முன்பு விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாசை அரிசி கஞ்சி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.ஒரு எக்டர்க்கு தேவையான 2.5 கிலோ சூடோமோனாசை 12.5 டன் உடன் நன்கு மக்கிய தொழு உரமுடன் கலந்து கடைசி உழவில் இடவேண்டும். சூடோமோனாஸ் உணவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மானிய விலையில் அனைத்து வட்டாரங்களில் கிடைக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.