இனி பெண்கள் நிம்மதியாக பயணம் செய்யலாம்!!அரசுப் பேருந்துகளில் பிரச்சனையா… .. பட்டுனு பட்டன அமுக்கு… சட்டுனு வரும் போலீஸ்… பேனிக் பட்டன், சிசிடிவி கேமரா வந்தாச்சு.!!

சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கண்டக்டர்-பயணிகளுக்கும் இடையே நடக்கும் வாக்குவதங்களை தடுக்கவும் முதல் கட்டமாக 500 பஸ்களில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்களை மாநகர போக்குவரத்து கழகம் நிறுவி உள்ளது.

எனவே இனிமேல் பிரச்சனை இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 25 பணிமனைகள் மூலம் 696 வழித்தடங்களில் 3300 பஸ்களை இயங்கி வருகிறது. மேலும் இதன் மூலம் சுமார் 43 லட்சம் பயணிகளுக்கு சேவை அளிக்கப்படுகிறது. அதேபோல் இதில் பெண் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பஸ்களில் பேனிக் பட்டன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சில வழித்தடங்களில் பயணிகளுக்கும் பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பஸ்கள் இயக்கப்படுவதில் கால தாமதமும் ஏற்படுகிறது. எனவே பயணிகளுக்கு பாதுகாப்பான முறையிலும், அமைதியான வகையில் பஸ்கள் இயக்க இந்த அட்டகாசமான தொழில்நுட்பங்கள் பஸ்களில் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது மாநகரப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சியாக 500 பேருந்தில் பேனிக் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலே ஆங்காங்கே இந்த பட்டன்கள் இருக்கும். இது அபாய ஒலி எழுப்பும் பட்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இது செயல்படும் விதமே அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது பேருந்தில் உங்களுக்கு பிரச்சனை என்றால் இந்த பட்டனை அழுத்தினால் போதும், பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தபட்டு இருக்கும். உடனே இந்த தகவல் பல்லவன் சாலையில் உள்ள எம்டிசி தலைமையகத்திற்கு செல்லும்.

பின்பு எந்த பேருந்தில் இருந்து அழைப்பு பெறப்பட்டதோ,அந்த பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் நேரலை காட்சிகளை தலைமையகத்தில் உள்ள குழுவினர் பார்த்து, உடனே காவல் துறை உதவி எண்ணுக்கு புகார் அளிப்பார்கள். குறிப்பாக இதன் மூலம் அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.

குறிப்பாக நிர்பயா கார்ப்பஸ் நிதியிலிருந்து பயனிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 500 பேருந்துகளில் இந்த பேனிக் பட்டன் பொருத்தும் பணியை போக்குவரத்து கழகம் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விரைவில் 2800 மாநகர பேருந்துகளில் இந்த பேனிக் பட்டன் வசதி விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்களின் நலன் கருதி அவர்கள் அதிகம் பயணிக்கும் பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தொழில்நுட்பங்கள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுதவதால் குற்றவாளிகள் தப்பவே முடியாது.

அதேபோல் பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதில் தவறு செய்பவர்களையும் கண்டறிய இந்த புதிய தொழில்நுட்பங்கள் உதவும். மேலும் இந்த பேனிக் பட்டன் குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கவும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.